சென்னை, டிச.9-
எத்தனை அணிகள் செயல்பட்டாலும் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. அனைத்து வகையிலும் தயாராகிவிட்டது. வெற்றி இலக்கை அடைய, ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் தி.மு.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக காணொலி காட்சி மூலம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் பாதி கிணறு தான் கடந்துள்ளோம். பரிசீலனை பணிகள் நிறைவடைந்து, நமது மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் வந்தால் தான் முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும்.
1 கோடியே 86 லட்சம்
மக்கள் பயன்
எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது ‘உதயசூரியன்’தான். நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மூலம், தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர்.
நமது சிறப்பான பணிகளைப் பார்த்து நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கின்றனர். பயனாளிகள், தி.மு.க.வினர், நடுநிலை வாக்காளர்கள் என சேர்த்தால் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளை தாண்டுவது சாத்தியமே.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் வாக்குகள்தான். இந்த முறை, அதைவிட கூடுதலாக அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி. நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம். இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.
சி.பி.ஐ, ஈ.டி (அமலாக்கத்துறை), ஐ.டி. (வருமான வரித்துறை), தேர்தல் கமிஷன் இவையனைத்தையும் அவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்து வார்கள். தினந்தோறும் ஏராளமான பொய்கள் பரப்புவார்கள், போலியான பிம்பங்களை உருவாக்குவார்கள்.
இவற்றை எதிர்கொள்ள, நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். கொள்கை, நிர்வாகிகள், தீயாக உழைக்கும் தொண்டர்கள், கட்டமைப்பு ஆகியவை தான் நமது பலம். இந்த பலங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதே நமது முக்கியமான வியூகம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது வாக்குகளை உறுதி செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது கழகத்தினர் உற்சாகத்துடன் செயல்பட வைக்க வேண்டும். அதற்காகத்தான், “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற இந்தப் பரப்புரை.
அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட மாநில நிர்வாகி முதல், வார்டு மற்றும் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரையும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க அழைக்க வேண்டும். அந்த வாக்குச்சாவடியில் மூத்த கழக முன்னோடிகள் அல்லது ஏதேனும் அதிருப்தியாளர்கள் இருந்தால், அவர்களையும் தவறவிடாமல் அழைக்க வேண்டும்.
தேனாம்பேட்டையில், என் வாக்குச்சாவடியில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நானும் நேரடியாகப் பங்கேற்பேன். வீடு வீடாகச் செல்லும் பூத் கமிட்டி குழுவினர் ஒவ்வொரு வீட்டிலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகளை வழங்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். நான் இரவிலும் உறங்காமல் உழைத்து வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும். அதே அளவிலான உழைப்பை, உங்களின் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன்.
ஒரு வாக்குச்சாவடியை வென்றால், ஒரு தொகுதியை வெல்லலாம். எனவே, இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியும் மிக முக்கியமானது. மீண்டும் வெல்வோம். வரலாறு படைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
![]()





