செய்திகள்

மீண்டும் தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.91,400-க்கு விற்பனை

Makkal Kural Official

சென்னை, அக்.11–

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் தங்கம் வாங்குவது ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் தங்கம் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் நேற்று காலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ. 90,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ. 11,260-க்கு விற்பனையானது. இந்த விலைக் குறைவு அதிக நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் மாலையில், ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.11,340க்கு விற்பனையானது.இந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.91,400-க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து, எட்டாக்கனியாக மாறிவிட்ட நிலையில், வெள்ளி விலையும் மக்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.7 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.3 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,87,000-க்கு விற்பனை ஆகிறது.

தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு அடுத்தபடியாக வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி, தொழில் துறையிலும் வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *