சென்னை, ஆக. 7–
மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம், சக்ரவர்த்தி நகரில் வசித்து வரும் ஐயங்கார் என்பவர், 2021ம் ஆண்டு, அவரது மகள் ஹேமாவதி என்பவர் 2வது பிரசவத்திற்கு வந்திருந்தபோது, ஹேமாவதியின் கணவருடைய உறவினரான சுபத்ரா மற்றும் அவரது கணவர் சந்துரு (எ) சந்திரசேகர் ஆகியோர் ஹேமாவதியிடம் தாங்கள் கெருகம்பாக்கத்தில் கடை நடத்தி வருவதாகவும், எங்களுக்கு தெரிந்த செல்வாக்கு மிகுந்த நபர் மூலம் பொறியியல் படித்திருக்கும் உனது கணவர் கோபிநாத்துக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.18 லட்சம் செலவாகும் என கூறியதன்பேரில், 2021ம் ஆண்டு 4 தவணைகளாக ரூ.18 இலட்சம் பணத்தை சந்திரசேகர் (எ) சந்துரு வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னர் இருவரும் வேலையும் வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்த நிலையில் பணத்தை திரும்ப பெற்று தருமாறும், ஐயங்கார் அயனாவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ரூ.18 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த எதிரி சந்துரு (எ) சந்திரசேகர் என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரி சந்துரு (எ) சந்திரசேகர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
![]()





