செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி செயல்முறை விளக்க மையங்கள்

Makkal Kural Official

சென்னை, ஜன. 22–

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியினை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்கள் நேற்று (21–ந் தேதி) முதல் அமைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் வாக்களித்த விவரங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்த கருவிகளின் செயல்விளக்கம் அளிப்பதற்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான செயல்முறை விளக்க மையங்கள் சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகம், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் என மொத்தம் 10 இடங்களில் நேற்று முதல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்விற்காக செயல்முறைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில் வாக்காளர்கள் செயல்முறை மூலம் வாக்களித்து சரிபார்ப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் – மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் பார்வையிட்டார். உடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் க. கற்பகம் இருந்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வானது, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்படும் வரை தொடர்ந்து நடத்தப்படும். அதன் பின்னர், மின்னணு ஊடகங்கள் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *