செய்திகள்

மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு ‘நீட்’ மறுதேர்வு

Makkal Kural Official

இந்தூர், ஜூலை.2-

நீட் தேர்வின்போது மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மத்திய பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த மே 4ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். அதன்தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன.

இதற்கிடையே மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், உஜ்ஜயின் உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதிய சில மாணவர்கள், மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

தேர்வின்போது, மோசமான வானிலை காரணமாக மின்தடை ஏற்பட்டதாகவும், அதனால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், எனவே, தங்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரி இருந்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பெரும்பாலான தேர்வு மையங்களில் மின்வினியோகத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக ஒரு கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுபோத் அபயங்கர், கடந்த மாதம் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தங்கள் மீது எந்த தவறும் இல்லாமலேயே மின்தடை காரணமாக, இந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தேர்வு மையங்களில் அந்த நிலை இல்லை. ஏன், அதே தேர்வு மையத்தில் கூட இயற்கை வெளிச்சம் படும் இடங்களில் அமர்ந்து இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை.

அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவு, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதி செய்கிறது.

ஆகவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கூடிய விரைவில் மறுதேர்வு நடத்தி, முடிவுகளை அறிவிக்க வேண்டும். மறுதேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களைத்தான் ‘ரேங்க்’ தயாரிக்க பரிசீலிக்க வேண்டும்.

சில மாணவர்கள், தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்ட ஜூன் 3-ந் தேதிக்கு பிறகு மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் இந்த உத்தரவால் எந்த ஆதாயமும் பெற முடியாது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

இந்தூர், உஜ்ஜயின் ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதிய 75 மாணவர்கள், இந்த உத்தரவால் பலன் அடைவார்கள் என்று மனுதாரர்களின் வக்கீல் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *