செய்திகள்

மாவட்ட செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

Makkal Kural Official

சென்னை, ஜன. 5–

மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கடலூரில் 9–ந்தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேமுதிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடலூரில் 9–ந்தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டுப் பணிகள் குறித்து பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், பார்த்தசாரதி உள்பட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது மாநாட்டு ஏற்பாடுகள், தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், தே.மு.தி.க. எந்த கூட்டணிக்கு செல்ல வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் மத்தியில் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? என மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாலசித்தோம். மாவட்டச் செயலாளர்கள் தங்களின் கருத்துகளை அதாவது எந்த கூட்டணிக்கு செல்லலாம்? என எழுதி பெட்டியில் போட்டுள்ளனர். அவற்றை தனிப்பட்ட முறையில் நான் பிரித்து படிக்க இருக்கிறேன். அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து. அதன்படியே கூட்டணி குறித்து முடிவு செய்து வரும் 9ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன. முழுக்க முழுக்க தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி இருக்கும்” என்று தெரிவித்தார்.

தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டுமென நினைப்பவர்கள் ஓரணியில் இணைய வேண்டுமென்பது எடப்பாடி பழனிசாமியின் கருத்து. ஆட்சியின் முடிவில் தேர்தல் நேரத்தில் நலத்திட்டங்களை அறிவிப்பதை எல்லா கட்சிகளுமே செய்கின்றன. ஓய்வூதியத்திட்ட அறிவிப்பில் பயனாளர்களின் கருத்து என்னவோ அதுதான் எங்களின் கருத்தும்.

சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் என நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களே அதற்கு சாட்சி. இந்த ஆட்சியை 50–50 என்றே மதிப்பிடுவேன்.

வருகின்ற தேர்தல் ஒரு மாற்றமான தேர்தலாக இருக்கும். கூட்டணி கட்சிகளும் மந்திரி சபையில் பங்கேற்கும் சாத்தியம் இருக்கக்கூடிய தேர்தலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. என 3 ஆப்சன்கள் வாக்குச்சீட்டில் கொடுக்கப்பட்டிருந்ததாக மாவட்ட செயலாளர்கள் கூறுகின்றனர். இந்த வாக்குப்பெட்டியை எண்ணி மாநாட்டில் முடிவை அறிவிப்போம் என பிரமேலதா தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *