செய்திகள்

மாலேகான் குண்டுவெடிப்பு: பா.ஜ.க. முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

Makkal Kural Official

மும்பை, ஜூலை 31–

மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேரையும் என்ஐஏ கோர்ட் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29–ந்தேதி மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர்,சுவாமி அம்ருதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட 7 பேர் மீது சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

தொடக்கத்தில், மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்பு படையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு கடந்த 2011-ல் என்ஐஏக்கு மாற்றப்பட்டது. மொத்தமுள்ள 323 சாட்சிகளில் 130 பேரிடம் விசாரணை கடந்த ஏப்ரலில் முடிவடைந்து விட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜாமீனில் உள்ள நிலையில், 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி இன்று தீர்ப்பை அறிவித்தார்.

மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளில் தான் இருந்தது என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. காயமடைந்தவர்கள் 101 பேர் இல்லை, 95 பேர் மட்டுமே. சில மருத்துவ சான்றிதழ்களில் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வாகனத்தின் சேசிஸ் எண் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தில் பிரக்யா சிங் தாக்கூருக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க அரசு தவறிவிட்டது. பிரசாத் புரோஹித் வீட்டில் வெடிபொருள்கள் வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கைரேகை, வெடிமருந்து குப்பை என எதுவும் சேகரிக்கப்படவில்லை.அபினவ் பாரத் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணத்தைப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.ஆகையால் இந்த வழக்கில் இருந்து பிரக்யா சிங், பிரசாத் புரோஹித் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள். வெடி விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *