செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை படைக்கவேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Makkal Kural Official

சென்னை, ஜன.22-

சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எந்த ஒரு நிறுவனமும், நூற்றாண்டு நிலைத்து நிற்பது என்பது மிகப்பெரும் சாதனை. அதுவும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரு கல்வி நிறுவனம் நூறாண்டு காண்பது என்பது பெருமைக்குரிய சாதனை.

ஆசிய அளவில், இப்படி ஒரு சாதனையை செய்திருக்கக்கூடிய பள்ளிகளை விரல்விட்டு எண்ணிவிட லாம். அப்படி, நூற்றாண்டு சாதனை மைல்கல்லை எட்டியிருக்கின்ற இந்த லிட்டில் பிளவர் பள்ளியினருக்கு என்னுடைய பாராட்டுக்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டு மல்லாமல், இளம்பெண்களின் வாழ்வாதாரத்திற்காகவும் தொழில் முனைவோர் பட்டறை, தடுப்பு மற்றும் புனர்வாழ்வு மையங்களையும் அமைத்து, சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றி வருகிறீர்கள். மேலும், வீட்டு வேலை தொழிலாளர்கள் நலன், புலம்பெயர் தொழிலாளர்கள் நலன், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல பணிகளையும், தொடர்ந்து செய்துகொண்டு வரும் எல்.எப்.சி. குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு நான் சொல்வது, இப்போது எப்படி தன்னம்பிக்கையுடன் படிக்கிறீர்களோ, இதே உறுதியுடன் நீங்கள் மேற்படிப்பையும் படித்து முடிக்கவேண்டும். உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்கக்கூடிய அரசும், முதலமைச்சரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று மறந்துவிடாதீர்கள். எது வந்தாலும், நாங்கள் இருக்கிறோம், தொடர்ந்து படியுங்கள். ஏற்கனவே, மாற்றுத்திறனாளி களுக்கான கல்வி உதவித்தொகையை நம்முடைய ஆட்சியில் இருமடங்காக உயர்த்தி அறிவித்திருக்கிறோம். ஆராய்ச்சி படிப்பு படிக்கும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை அறிவித்திருக்கிறோம். நீங்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.ஆட்டி ணசத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பராமரிப்புத் தொகை வழங்கப்படுகிறது. நம்முடைய அரசு தரும் ஆதரவால், பாராலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்று பல உலகத்தொடர்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதனை மேல் சாதனை படைத்துகொண்டு இருக்கிறார்கள்.

அண்மையில்கூட, தமிழ்நாட்டில் உள்ள 13 ஆயிரத்துக்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் இடம்பெற இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனையை நம்முடைய ஆட்சி செய்திருக்கிறது.

லிட்டில் பிளவர் மாணவர்கள் போலவே, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் ஏதாவது ஒரு துறையில், சாதனை படைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *