வேலூர், நவ.25–
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் 410 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை, காவல்துறை. ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 410 மனுக்களை மாவட்ட கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மகளிர் திட்ட இயக்குநர் பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் எஸ்.ஆர்.என்.மதுசெழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ச.பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





