ராணிப்பேட்டை, ஜன. 6:
இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ம் கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 459 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சக்கர நாற்காலி கோரி மனு அளித்த காவனூர், வெங்கடாபுரத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி சுமித்ராவுக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.18,000 மதிப்பீட்டிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) கீதாலட்சுமி, நேர்முக உதவியாளர் (பொது) இராஜராஜன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைநம்பி, உதவி இயக்குநர்கள் (ஊராட்சி) பாரி, சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





