செய்திகள்

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 3–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை 4–வது அலைச்சறுக்கு சாம்பியன் போட்டி :

Makkal Kural Official

சென்னை, ஜூலை 16–

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 3–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை 4–வது ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் (அலைச்சறுக்கல்) தமிழ்நாடு போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் (சர்ஃபிங்கில்) தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த சர்வதேச போட்டியில் சுமார் 150 விளையாட்டு வீரர்கள் போட்டியிட உள்ளார்கள். இந்த போட்டி நிகழ்வு தமிழ்நாட்டில் அலைச்சறுக்கு சுற்றுலாவை பெரிதும் ஊக்குவிக்கும் என்றார் அவர்.

இது பற்றி உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:–

‘‘கடந்த சில ஆண்டுகளில், ஃபிடே சதுரங்கப்போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, உலக சர்ஃப் லீக் தகுதித் தொடர், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி, தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சைக்ளோதான்ஸ், தெற்காசியாவின் முதல் பார்முலா 4 இரவு நேர சாலை பந்தையம், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்போட்டி 2023 உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை நமது தமிழ்நாடு நடத்தியுள்ளது.

இந்த விளையாட்டு நிகழ்வுகள் இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டை முக்கிய ஒரு விளையாட்டு சக்தியாக நிலைநிறுத்தியுள்ளன. இப்போது, ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளதன் மூலமாக எங்கள் தொப்பியில் மற்றொரு இறகினை சேர்த்து உள்ளோம். இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக முதலமைச்சர் 3.30 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.

இந்த போட்டி மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் இது ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இறுதி தகுதிச் சுற்றுப் போட்டியாகும்.

2023 உலக சர்ஃபிங் விளையாட்டு போட்டியில் பங்குபெற்ற 4 இந்திய சர்ஃபிங் வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். முந்தைய ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற்ற 8 இந்திய விளையாட்டு வீரர்களில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் சிறப்பான செயல்பாடுகள் இந்தியா வெள்ளிப் பதக்கம் வெல்லவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு கூடுதல் இடங்களைப் பெறவும் உதவியது.

10 தமிழக வீரர்கள்

நடைபெற உள்ள ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2026 இல், இந்திய அணியில் பங்குபெறும் 12 விளையாட்டு வீரர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியதாகும்.

தமிழ்நாட்டின் அலைச்சறுக்கு வீரர் கிஷோர் குமார் திறமையான, உதாரணமான இளம் வீரராக திகழ்கிறார். அவர் பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவை முன்னிலைப் படுத்தியுள்ளார். அவரது வெற்றி பல இளம் அலைச்சறுக்கு வீரர்களை, குறிப்பாக நமது கடலோர மற்றும் மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.

இந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அலைச்சறுக்கு விளையாட்டு பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க உதவியுள்ளது.

தமிழ்நாட்டின் நீர் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரப்பன்வலசை கிராமத்தில் சுமார் 43 கோடி ரூபாய் செலவில் ஒரு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமியை நிறுவ உத்தரவிட்டுள்ளார்.

மீன்பிடி இளைஞர்களுக்கு

வேலைவாய்ப்பு

எங்களது விரிவான திட்டங்கள் உள்ளூர் திறமையாளர்களை சர்வதேச தளங்களுக்கு உயர உதவியுள்ளன. அலைச்சறுக்கு விளையாட்டு மேம்பாட்டில் இன்று தமிழ்நாடு ஒரு மாதிரி மாநிலமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. எங்களது முயற்சிகள் கடலோர சுற்றுலாவை மேம்படுத்தி உள்ளதுடன், குறிப்பாக பாரம்பரிய மீன்பிடி சமூக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

அலைச்சறுக்கு விளையாட்டை சாதாரண நடவடிக்கையிலிருந்து முக்கிய விளையாட்டு போட்டியாக உருவாக்கியதற்காக முதலமைச்சரின் தொலைநோக்குத் தலைமைக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாடு தற்போது இந்தியாவின் அலைச்சறுக்கு தலைநகராக விளங்குகின்றது. மேலும் சர்வதேச போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலிருந்து எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

குழு புகைப்படம்

இந்நிகழ்ச்சியில், இந்திய அலைச்சறுக்கு அணி வீரர், வீராங்கனைகள் உதயநிதி ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், துணை முதலமைச்சர் சர்ஃபிங் விளையாட்டு குறித்த “TRACKS INDIA” என்ற இதழை வெளியிட, இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பின் தலைவர் அருண் வாசு பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பின் கவுன்சில் மெம்பர் சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்க துணைத்தலைவர் வீரபாகு, தமிழ்நாட்டைச் சேர்ந்த சர்வதேச அலைச்சறுக்கு விளையாட்டு வீரர் கிஷோர் குமார், அலைச்சறுக்கு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *