செய்திகள்

மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்கள் வழங்கினார்

Makkal Kural Official

புதுச்சேரி, டிச. 30:

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை படித்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கினார்.

அதன்படி 746 பேருக்கு முனைவர் பட்டமும், இளநிலை, முதுநிலை படிப்புகளில் முதலிடம் பிடித்த 759 மாணவர்களுக்கு தங்க பதக்கமும், மேலும் 89 ஆயிரத்து 476 மாணவர்களுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டன.

விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

இன்றைய நாள் புதுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பான நாள். இது உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கம். புதுவை பல்கலைக்கழகம் தலைசிறந்த பல்கலைக்கழகமாக முன்னேறி வருகிறது. உலகில் உள்ள பல்கலைக்கழகத்தோடு புதுச்சேரி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

உலக அளவில் உள்ள 2 சதவீத விஞ்ஞானிகளில் புதுவை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 28 பேர் இடம் பிடித்திருப்பது பெருமைக்குரியது. வரும் 2047-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதற்கு மாணவர்கள் பங்களிப்பு அவசியம். புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியாவின் இளைஞர்களின் சவால்களையும், முன்னேற்றங்களையும் ஒருங்கிணைப்பது தான் பிரதமர் மோடியின் முக்கிய திட்டம். தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பது தான் பிரதமரின் கனவு. புத்தகங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் கல்விக் கொள்கையின் நோக்கம்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தோம். இப்போது எப்படி மாறி இருக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகியவற்றை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். இளைய தலைமுறையினரிடம் போதை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. போதை பழக்கத்தில் இருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டும்.

கல்வியை கற்க நமக்கு கிடைக்கும் காலம் மிகக்குறைவு. மாணவர்கள் பறந்த அறிவு கடலில் இருந்து நல்லதை தேர்வு செய்து படிக்க வேண்டும். படித்ததில் மிக நல்லதை நமதாக்கிக்கொள்ள வேண்டும். அது நம்மை உயர்த்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

மனிதனை உயர்த்துவது பணம், சொத்து அல்ல. அவனது குணம் தான் உயர்த்தும். வாழ்க்கை சவால்களால் நிரம்பியது. போட்டிகள் இருக்கத்தான் செய்கிறது. போட்டிகள் இல்லாத உலகம் என்றைக்கும் இருந்ததாக சரித்திரம் இல்லை. அந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக குறுக்கு வழிகளை கடைப்பிடிக்கக்கூடாது. அது பெரிய வெற்றியை தருவது போன்ற தோன்றத்தை தரும். இறுதியில் ஒட்டுமொத்த தோல்வியை தந்துவிடும்.

உங்கள் கல்வி வேலைக்கு மட்டுமல்ல. உங்கள் பட்டம் பதவிக்கு மட்டுமல்ல. அது உங்களை நல்ல மனிதர்களாக, பொறுப்புள்ள குடிமக்களாகவும், குடும்பத்தையும், தேசத்தையும் நேசித்து உயர்த்தும் சக்தியாக மாற வேண்டும்.

நமக்கு நேரம் கிடைப்பது இல்லை என்று பெரும்பாலானவர்கள் நினைப்பது உண்டு. நமது பெற்றோர்களை பார்ப்பதற்கு கூட நேரமில்லை. நேரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. கடவுளே இந்த மண்ணில் அவதரித்தாலும் அவருக்கும் 24 மணி நேரம் தான். அந்த நேரத்தை நாம் எப்படி ஒதுக்குகிறோம். எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் நமது உயர்வு உள்ளது. அதை சரியாக செய்வது நமது கடமை. பள்ளிக்காலத்தில் கால அட்டவணையை பின்பற்றி இருப்போம். அதுபோலவே வாழ்க்கையில் கால அட்டவணை மிகவும் தேவை. நேரத்தை சரியாக கடைப்பிடிப்பவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு வரவேற்றார். விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினரும், ஆந்திர மாநில அரசின் மதிப்புறு ஆலோசகருமான சதீஷ்ரெட்டி, செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *