செய்திகள்

மழைக்காலக் கூட்டத்தொடர்: சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை 20–

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் கூட்டத் தொடர் முழுவதும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன் மற்றும் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு, அண்ணா தி.மு.க. சார்பில் தம்பிதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மழைக்கால கூட்டத் தொடரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா – பாகிஸ்தான் மோதல் பற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து, பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பணமூட்டை சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவகாரமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *