செய்திகள்

மலேசியாவில் உற்சாக வரவேற்பு: நடனக் கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடினார்

Makkal Kural Official

கோலாலம்பூர், அக். 26–

மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்த நிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். முன்னதாக கம்போடியா–தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திடுகிறார்.

இதற்காக வாஷிங்டனில் இருந்து 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வந்திறங்கிய அதிபர் டிரம்ப்புக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது விமான ஓடுபாதையில் மலேசியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்த நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ப் நடனமாடினார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் அதிபரும் இணைந்து நடனமாடினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. டிரம்ப்புக்கு ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

குறிப்பாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.

இந்த பயணத்தின்போது கடைசி நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ டிரம்ப் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரிய அதிபருடனான சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு டிரம்ப், “கிம் ஜாங் அன் எனக்கு நல்ல நண்பர். அவரை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன். வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்” என்றார். இருப்பினும் பயணத்திட்டத்தில் வடகொரிய அதிபர் சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *