* நெல்லை மாணவன் முதலிடம் * 30–ந்தேதி கலந்தாய்வு ஆரம்பம்
சென்னை, ஜூலை 25–
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில் நெல்லை மாணவன் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்துள்ளார்.
கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–
விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் துவங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பப் பரிசீலனையின்போது 20 மாணவர்கள் போலியான சான்றிதழ் கொடுத்திருந்ததால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 4,281 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 4,062 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 39,853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்தார். 655 மதிப்பெண்ணுடன் சேலத்தை சேர்ந்த மாணவர் அபினீத் நாகராஜ் 2ம் இடத்தையும், ஹருதிக் விஜயராஜா 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாணவர் ராகேஷ் 4வது இடத்தையும், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 5வது இடத்தையும் பிடித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர தனியார் கல்லூரிகளில் உள்ள 3,450 இடங்களில் இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அவற்றில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோன்று 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்களும் உள்ளன. அவற்றில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
![]()





