சென்னை, நவ.13–
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 196 உதவியாளர் மற்றும் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடத்திற்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 19 திறன்மிகு உதவியாளர்–-II (பொருத்துநர்– II) பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4,576 உதவி மருத்துவர்கள், 48 பல் மருத்துவர்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியர்கள், 2,810 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளடக்கிய 7,413 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 555 உதவியாளர் பணியிடங்கள், 584 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 187 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 314 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக 196உதவியாளர்கள்பணியிடத்திற்கும், குடும்ப நல இயக்ககத்தின்கீழ் 18 வட்டாரசுகாதாரபுள்ளியியலாளர்பணியிடத்திற்கும் தேர்வு செய்யப் பட்டவர்களுக்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தமிழ்நாடு மாநில போக்குவரத்து இயக்ககத்தின்கீழ் 19 திறன்மிகு உதவியாளர்–-II பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், என மொத்தம் 233 நபர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக 40 கோடி ரூபாய் செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு ஏற்படும் மூன்று முக்கிய புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் 1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை முதலமைச்சர் பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் கீழ், நடமாடும் மருத்துவ ஊர்தியின் மூலம், பெண்கள் வசிக்கும் வசிப்பிடத்திற்கு அருகிலேயே மூன்று முக்கிய புற்றுநோய்களான கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய்களுக்கான பரிசோதனை மற்றும் பிற முக்கிய நோய்களான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ரத்த சோகை, இருதய நோய்கள் போன்றவற்றிற்கான பரிசோதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் டிஜிட்டல் மேம்மோகிராபி, ECG கருவி, செமி-ஆட்டோஅனலைசேர் உட்பட பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வாகனமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதை தொடர்ந்து, மேலும் 37 வாகனங்கள் 40 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் மு. விஜயலட்சுமி, மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத் தலைவர் உமா மகேஸ்வரி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் எ.அருண் தம்புராஜ், ஊரக நலப் பணிகள் இயக்குநர் த.க.சித்ரா, குடும்ப நல இயக்குநர் வெ.சத்யா, சுகாதார போக்குவரத்துத் துறை இயக்குநர் எஸ். நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





