சென்னை, ஜன. 21:
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினிகளை -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், துணை சுகாதார படிப்புகள் மற்றும் செவிலியர் படிப்புகள் பயிலும் மாணவர்கள் இவர்கள்.
முதலமைச்சர் கடந்த 5–ந் தேதி அன்று சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் மூலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு ரூ.2,172 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, மோகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தாராமன், அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரவிந்த், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கவிதா, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஹரிஹரன், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பிரேம்குமார் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]()





