கோவை, அக். 25–
கோவை சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பிறந்தநாள் கொண்டாட காரில் சென்ற நண்பர்கள் 4 பேர் பலியானார்கள்.
கோவை மாவட்டம் பேரூர் அருகே செட்டிபாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அந்த காரில் நண்பர்கள் 5 பேர் பயணம் செய்தனர். அங்குள்ள ஒரு வளைவில் கார் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் பெரும்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காரில் பயணித்த 5 பேரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரீஷ் (20), பிரகாஷ் (22) புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சபரி அய்யப்பன் (21) ஆகியோர் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகத்தியன் (20), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் (19) வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவர்.
வாட்டர் வாஷுக்காக
வந்த கார்
நேற்று ஹரீஷுக்கு பிறந்தநாள். இதனால் நண்பர்கள் 5 பேரும் அவரின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக வாட்டர் வாஷுக்காக வந்த ஒரு காரில், நேற்று இரவு 5 பேரும் சென்றுள்ளனர். பிரகாஷ் காரை ஓட்டியுள்ளார். அப்போது அவர்கள் மது அருந்திவிட்டு காரில் அதிவேகமாக பயணம் செய்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்தில் பிரகாஷ், ஹரிஷ், சபரி ஐயப்பன் அகத்தியன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
![]()





