சென்னை, ஆக 26–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார்.
இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் காலையில் சூடாக, சுவையாக, சத்தான சாப்பிட்டு, கிளாஸ் ரூமுக்குள்ளே தெம்பாக நுழைய இருக்கிறார்கள் என்று அவர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது:–
‘‘இந்தத் திட்டத்தால் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால், இதைவிட மனநிறைவு என்ன இருக்க முடியம்? அடுத்து, இது மகிழ்ச்சிக்குரிய நாளும்கூட. ஏனென்றால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இங்கே வந்திருக்கிறார். இதற்கு முன்பு, இப்போது நாடே திரும்பிப் பார்க்கின்ற புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு, டெல்லியின் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார். இப்போது இந்த திட்டத்திற்கு பகவந்த் மான் வந்திருக்கிறார்.
இந்தத் திட்டத்தின் அட்டகாசமான சக்சஸ் மற்றும் இது கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்ட்டைப் பார்த்து, இனி, நகர்ப்புற பகுதிகளில் செயல்படுகின்ற 2 ஆயிரத்து 429 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்கிறோம். இதனால், கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற இருக்கிறார்கள். கிராண்ட் டோட்டலாக சொல்ல வேண்டும் என்றால், ஆண்டொன்றுக்கு 600 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால், இதை செலவு என்று நான் சொல்ல மாட்டேன். இது ஒரு சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட். எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமூகத்துக்கு தரப் போகின்ற முதலீடு இது.
என்னரும் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை நம்பி, அவர்களின் திறமை மேல், அறிவு மேல், ஆற்றல் மேல் நம்பிக்கை வைத்து, தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை செய்கிறோம். நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து, முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் பணியாற்றினால், அதுதான் இந்தத் திட்டத்தின் உண்மையான வெற்றி.
பிற நாடுகளும்
தொடங்க ஆலோசனை…
குழந்தைங்களின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது. ஸ்கூலுக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.
க்ளாஸ் ரூமில் கவனம் மற்றும் ஈடுபாடு அதிகமாகி இருக்கிறது. வகுப்பில் தோழமை உணர்வு மேம்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது.
எதிர்பாராத பல நன்மைகளையும் இந்தத் திட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவை பள்ளிகளே வழங்குவதால், ஒரு குடும்பத்தில் அம்மா – அப்பா இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களுடைய பணிச்சுமை குறைந்திருப்பதுடன், குழந்தைகள் ஸ்கூலில் வயிறார சாப்பிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையையும், நிம்மதியையும் தருகிறது.
அவ்வளவு ஏன்… டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை, அரசுப் பள்ளிகளில், குழந்தைகளிடையே ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது. ஹாஸ்பிடலுக்குச் செல்வதும் குறைந்திருக்கிறது. இன்னும் சொல்கிறேன். காலை உணவுத் திட்டத்தால், அட்டெண்டன்ஸ் கூடியிருக்கிறது. கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று வாய்ப்புகள் அதுவும் குறைந்திருக்கிறது. இப்படி, நிறைய பாசிட்டிவாக இருப்பது ஆய்வு மூலமாக நமக்கு தெரிய வந்திருக்கிறது.
ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள். அப்படித்தான், காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும், பிற நாடுகளுமே கூட தொடங்கவும், செயல்படுத்தவும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கனடா போன்ற வளர்ந்த மேலை நாடுகளிலும், காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நாம் இதை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம் என்பது நமக்கெல்லாம் இருக்கின்ற பெருமை! இந்த நேரத்தில் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கின்ற மற்றொரு முக்கியமான திட்டத்தையும் சொல்ல விரும்புகிறேன்.
ஊட்டச்சத்தை
உறுதி செய்ய திட்டம்
அது, “ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்! இந்த திட்டத்தால் என்ன பயன் என்றால், இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் முதல் பகுதியில், ஆறு மாதம் வரையிலான 14 ஆயிரத்து 901 குழந்தைகளில், 13 ஆயிரத்து 262 குழந்தைகளையும், இரண்டாம் பகுதியில், ஆறு மாதத்தில் இருந்து ஆறு வயது வரையிலான 92 ஆயிரத்து 15 குழந்தைகளில், 61 ஆயிரத்து 651 குழந்தைகளையும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம்.
அதேபோல, இரண்டாம் கட்டத்தில், ஆறு மாதம் வரையிலான 76 ஆயிரத்து 705 குழந்தைகளில், 67 ஆயிரத்து 913 குழந்தைகளை சத்துள்ள குழந்தைகளாக வளர்த்தெடுத்திருக்கிறோம்.
மாணவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்… நன்றாக சாப்பிடுங்கள்… நன்றாக படியுங்கள்… நன்றாக விளையாடுங்கள்… உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
முதலமைச்சரான உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், நம்முடைய திராவிட மாடல் அரசும், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் உங்களுக்காக செய்து தருவோம்! எங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே! எப்போதும் உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம், இருப்போம். குழந்தைகளுக்கு ஆல் த பெஸ்ட்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த்மான், அவரது துணைவியார் குர்பித்கவுர் மான், துணைமுதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர்கள் கீதாஜீவன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தோழர் முத்தரசன், கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்றஉறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர் முருகானந்தம், செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் சௌமியா சுவாமிநாதன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
![]()





