செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷா 9-ந்தேதி தமிழகம் வருகை

Makkal Kural Official

சென்னை, டிச.26-

அண்ணா தி.மு.க.–பா.ஜ.க. தலைவர்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, 9-ந்தேதி தமிழகம் வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவருடன் கூட்டணி தலைவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி தயாராகி வருகிறது. கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும் பியூஸ்கோயல் உள்ளிட்ட 3 மத்திய மந்திரிகளை கொண்ட தேர்தல் குழுவை பா.ஜனதா அகில இந்திய தலைமை அமைத்தது.

மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தலைமையிலான இந்த குழுவினர் சமீபத்தில் தமிழகம் வந்தனர். அவர்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது தமிழக அரசியல் நிலவரம், சட்டசபை தேர்தல், கூட்டணிக்கு புதிய கட்சிகளை சேர்ப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தை நடத்த பா.ஜ.க. ஆலோசித்து வருகிறது. இந்த கூட்டத்தையும், ஏற்கனவே, பா.ஜனதா மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடத்தி வரும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரசார பயணத்தை நிறைவு கூட்டத்தையும் ஒன்றாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் நிறைவு கூட்டம் புதுக்கோட்டையில் ஜனவரி 9-ந்தேதி நடக்க உள்ளது. இந்த விழாவை அண்ணா தி.மு.க.–பா.ஜ.க. பிரச்சார பொதுக்கூட்டமாக நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

இதில் முக்கிய தலைவர்களையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் பங்கேற்க ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா ஆகியோர் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில், மத்திய மந்திரி அமித்ஷா இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

இதனிடையே புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்போது, சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இதனிடையே பிரதமர் மோடி ஜனவரி 15-ந்தேதி கோவை வர உள்ளார். கோவையில் நடக்கும் பொங்கல் விழாவில் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *