செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகளின் இறப்புக்கு காரணமான இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது

Makkal Kural Official

போபால், அக். 5–

மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இருமல் மருந்தைப் பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தில் சிந்த்வாராவில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் குழந்தைகள் சிலருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறிய நிலையில், அக்டோபர் 3ம் தேதி வரையில் 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், சளி, இருமல், காய்ச்சல் தொல்லையால் பாராசியாசில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் குழந்தைகளுக்கு ‘கோல்ட்ரிப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ’ ஆகிய இருமல் மருந்துகளை டாக்டர் பிரவீன் சோனி பரிந்துரைத்தார்.அடுத்த சில நாள்களிலேயே குழந்தைகளுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை, முக வீக்கம், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்தது தெரிய வந்தது. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், 2 குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ஸ்ரீசென் பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தில் ஆபத்தான டைஎத்திலின் கிளைக்கால் இருந்தது தெரிய வந்தது. பெயிண்ட், மை போன்ற பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது மத்திய பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்ததுடன், 15-க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தடையும் விதித்தது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மட்டுமின்றி தமிழகம் மற்றும் கேரளத்திலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன், அவர்களுக்கு மருந்தைப் பரிந்துரைத்ததால், டாக்டர் பிரவீன் சோனியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *