செய்திகள்

மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

Makkal Kural Official

சென்னை, நவ. 1–

அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேலும், கிழக்கு-வடகிழக்கு திசையில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மகாராஷ்டிரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக்கூடும். தெற்கு மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *