செய்திகள்

மதுரை வடக்கு தொகுதியில் கூட்டமேடைக்கு 2 கி.மீ. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார்

Makkal Kural Official

மதுரை, செப்.3–

’’மதுரை ஊழல் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம், மக்கள் எதிர்ப்பை திசை திருப்பவே இந்த நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகளில் மக்களை சந்தித்து எழுச்சியுரையாற்றிய அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக மதுரை, கே.புதூர் அழகர் கோவில் பிரதான சாலையில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

“மதுரை வடக்கு தொகுதி அண்ணா தி.மு.க.வின் கோட்டை. 2 கிமீ தூரம் மக்கள் வெள்ளத்தில் நீந்திவந்து உங்களை சந்திக்கிறேன். அண்ணா திமுக ஆட்சி இருந்த போது மதுரை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டது. இன்று மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது. ஆளுங்கட்சி மேயர் 200 கோடி ரூபாய் முறைகேட்டில் சிக்கியிருக்கிறார். அதை, இந்த அரசே விசாரித்து மண்டல குழு தலைவர்கள் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

வரிக்குழு, நகரமைப்பு குழு தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களின் வரியை ஏமாற்றுகிற அரசு திமுக அரசு. அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக விசாரித்து சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறை மேயரை கைது செய்யவில்லை, அவரது கணவரை கைது செய்திருக்கின்றனர். இந்த ஊழலுக்கு யார் பொறுப்பு மேயர் தானே? அவரது கணவரையும் சாதாரண செக்‌ஷனில் கைதுசெய்து கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள். இன்னும் மேயரை ஏன் பதவியில் தொடர வைக்கிறீர்கள், ஏதோ பிரச்னை இருக்கிறது. தி.மு.க.வினர் தான் ஊழல் செய்தது என்று திமுக அரசே விசாரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப திமுக நாடகம் ஆடியுள்ளது. அண்ணா திமுக ஆட்சியில் எல்லோரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆடு, மாடு, கோழி, பன்றி வரை வரி போட்டு வசூல் செய்து அடிப்படை வசதி செய்து தருவதற்குப் பதிலாக கொள்ளையடித்துள்ளனர்.

குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். அண்ணா திமுக ஆட்சியில் ஆயிரம் சதுரடி பிளான் அப்ரூவலுக்கு மாநகராட்சியில் 37,500 ரூபாய். கழிவுநீர் கட்டமைப்பு டெபாசிட் அதில் அடங்கிவிடும். அதுவே திமுக ஆட்சியில் 88 ஆயிரம் ரூபாய், கழிவுநீர் கட்டமைப்பு டெபாசிட் நிதி 20 ஆயிரம் தனி. கிட்டத்தட்ட 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் ஆயிரம் சதுரடிக்கு வசூல் செய்கிறார்கள். இது, எந்த விதத்தில் நியாயம்?

அண்ணா திமுக ஆட்சியில் நிறைய பள்ளிகள் திறந்தோம். கற்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. திமுக ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டது. 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம். திமுக அரசால் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கொண்டுவர முடிந்ததா? முடியாது. அதற்கு திறமையில்லை.

6000 டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியமாக கொடுக்கப்படும்.

பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.

ஏழை, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு தீபாவளி வரும்போதும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

கழிவுநீர் ஆற்றில்

கலக்காமல் இருக்க…

மதுரை வடக்கு தொகுதியில், வண்டியூர் கண்மாய் குடிமராமத்து திட்டத்தில் தூர் வாரப்பட்டது, செல்லூர் கன்மாய் தூர் வாரப்பட்டது, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய கட்டடம் கட்டப்பட்டது, மதுரை கோரிப்பாளையம் உயர்மட்டப் பாலம் 150 கோடியில் அமைக்கப்பட்டது, உலக தமிழ் சங்க கட்டிடம் 36 கோடியில் கட்டப்பட்டது, தமுக்கம் மைதானத்தில் கோவை கொடிசியா அரங்கம் போல மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட்டது, மதுரை பந்தல்குடி கால்வாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு கால்வாய் அமைத்து கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் இருக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு புதிய வளாகம் அமைக்கப்பட்டது, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஜப்பான் நாட்டு நிதி பெற்று 280 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டிக்கொடுத்தோம், புற்றுநோய் சிகிச்சை மையம், அதிநவீன கருவிகள், இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தோம். திண்டுக்கல்லில் இரண்டு கையும் இல்லாத ஒருவருக்கு மாற்று கை பொருத்தி சாதனை படைத்தது அண்ணா திமுக அரசு. திமுக ஆட்சியில் கையோடு போனால் கையில்லாமல் வருவார்கள். காலோடு போன கால்பந்து வீராங்கனை உயிரில்லாமல் தான் வெளிவந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அண்ணா திமுக ஆட்சியில்தான் திட்டமிடப்பட்டது. ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அற்புதமான சிகிச்சை அளிக்க பிரதமரை நேரடியாக அழைத்து வந்து நான் முதல்வராக இருக்கும்போது அடிக்கல் நாட்டினோம். அந்த திட்டம் விரைந்து செயல்படுத்தி அடுத்தாண்டு அண்ணா திமுக அரசு அமைந்ததும் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும்.

அடுத்தாண்டு தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும் கூட்டணி வேட்பாளருக்கு அவர்கள் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பைபை ஸ்டாலின்”.

இவ்வாறு எடப்பாடி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *