செய்திகள்

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Makkal Kural Official

மதுரை, ஜூலை 20–

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே மாதம் மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

மேலும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர், தாடி வைத்திருந்தனர் என்றும் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானதுஇரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் மதுரை ஆதீனம் பொய்யான தகவலை பரப்பியதாக கூறி சென்னையை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், கார் விபத்து விவகாரத்தில் மத ரீதியான மோதலை ஏற்படுத்தும் விதமாகப் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீன மடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின்போது ஆதின மடத்திற்குள் ஆதினத்தை தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். முன்னதாக போலீசாரை உள்ளே நுழைய விடாமல், பாஜகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *