மதுரை, ஆக.8-
மதுரையில் கோட்டை வடிவில் த.வெ.க. மாநாட்டு மேடை பிரமாண்ட மாக அமைக்கப்பட்டு வருகிறது. தொண்டர் களை விஜய் சந்திக்கும் வகையில் 200 மீட்டரில் நடைமேடையும் அமைக்கும் பணியும் நடக்கிறது.
மதுரையில் கட்சியின் 2-வது மாநாட்டை 21-ந்தேதி நடத்த த.வெ.க. முடிவு செய்துள்ளது. தற்போது முழு வீச்சில் மாநாட்டு மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மாநாட்டு பந்தல் 250 அடி நீளத்தில் 70 அடி அகலத்தில் கோட்டை வடிவில் வடிவமைக்கப்பட உள்ளது.
முதல் மாநாட்டை போலவே நீண்ட நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக மேடையில் இருந்து தொண்டர்கள் அமரும் இடம் அருகே 200 மீட்டரில் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான அடிப்படை வசதிகளுடன் விழா அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக அமரும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. அரங்கத்திற்கு வெளியே கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது.
வாகனங்கள் நிறுத்துவதற்கு 4 இடங்கள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு அரங்கம் முழுவதும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மருத்துவ வசதிகளுடன் கட்சியின் மருத்துவ அணியினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாநாட்டு பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
![]()





