மதுரை, ஆக. 21–
த.வெ.க. மாநாட்டிற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே தொண்டர்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சும், அணுகுமுறையும் அரசியல் வல்லுநர்களை உற்று கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது த.வெ.க.வின் பார்வை தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிக இடங்களை பிடிக்கும் அணிகளே ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் அதிகமாகியிருக்கிறது. எனவே தி.மு.க., பா.ஜ.க.வை தொடர்ந்து தற்போது த.வெ.க.வும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை குறி வைத்திருக்கிறது. அதன்படி விஜய், த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டார்.
அதன்படி த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை – -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை கருதி அவசர மருத்துவ உதவிக்காக மாநாடு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கில் மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டின் மேடைகளில் த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் அமரும் வகையில் சுமார் 216 மீட்டர் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாநில நிர்வாகிகள் மற்றும் முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் அமருவதற்காக 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. விஜய் 300 மீட்டர் வரை நடந்து சென்று தொண்டர்களை அருகில் சந்திக்க ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 600 பேர் கொண்ட மருத்துவக்குழுவில் 250 டாக்டர்கள், 250 செவலியர்கள் பணியில் உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக அமர்ந்து மாநாடு நிகழ்வுகளை பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை தவிர குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட் டவை சிறப்பாக செய்து தரப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரை மாநாட்டுத் திடலில் நேற்று நள்ளிரவு முதலே தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். காலை 10 மணி அளவில் மாநாட்டு பந்தலில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பின. லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர். பெண்கள் பலர் குழந்தைகளுடனும் மாநாட்டுக்கு வந்திருந்தனர். மேலும் சிலர் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்திருந்தனர். விஜய் மாநாடு காரணமாக மதுரை மாநகரமே குலுங்கியது என்று சொல்லும் அளவிற்கு மதுரை பகுதி முழுவதுமே த.வெ.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர். மாநாட்டிற்கு குழந்தைகளுடன் யாரும் வர வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில் பலர் குழந்தைகளுடன் வந்துள்ளனர். குழந்தைகளுடன் வந்தவர்கள் மாநாட்டு வாசல் பகுதியிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாநாட்டு திடலில் ஆங்காங்கே உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அவற்றை தொண்டர்கள் முண்டி அடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தொண்டர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் அந்த பகுதியில் வாகன நிறுத்தங்கள் முழுவதும் நிரம்பியதால் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை போலீசார் ஆங்காங்கே திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் தொண்டர்களுக்கும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடும் வெயில்:
தொண்டர்கள் மயக்கம்
கடும் வெய்யில் காரணமாக தரை விரிப்புகளை கிழித்து எடுத்து தற்காலிக கூடாரம் அமைத்து ரசிகர்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டனர். சிலர் இருக்கைகளை நிழற்குடை போல் மாற்றி தலையில் பிடித்துக் கொண்டனர். கடும் வெய்யில் காரணமாக 15க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். இதனால் மாநாட்டு திடல் முழுவதும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்து வருகின்றனர். மாநாடு பந்தல் முழுவதும் இதன் காரணமாக ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்த நிலையில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மற்ற பகுதிகளுக்கு அவர்கள் செல்கின்றனர். தனியார் பவுன்சர்கள் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் கடும் அவதி அடைகின்றனர். மேலும் தடுப்புகளில் இருந்து மாறிச் செல்லாமல் இருக்க தடுப்புகள் அனைத்தும் கிரீஸ் தடவப்பட்டது. அதற்கு தொண்டர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதனால் தனியார் பாதுகாவலர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முன் கூட்டியே
தொடங்கும் கூட்டம்
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களையும், பொது மக்களையும் வரவேற்கும் விதமாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் இரவு பகல் பார்க்காமல் மாநாட்டு வேலைகளை நிறைவு செய்துள்ளார். தொண்டர்களின் வருகையால் த.வெ.க. மாநாட்டு பந்தல் இப்போதே நிரம்பியுள்ளது. இதனால் கூட்டத்தை முன்கூட்டியே நடத்த திடமிடப்பட்டுள்ளது. இதையொட்டி மாநாட்டு பந்தலுக்கு விஜய் முன்கூட்டியே வர உள்ள்ளார். பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 300 மீட்டர் நீளத்திலான ரேம்ப் வாக் நடைமேடயில் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார். பின்னர் மாநாட்டு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், காமராஜர், பெரியார், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். த.வெ.க. கொடியை தலைவர் விஜய் ஏற்றி வைக்கிறார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் உள்ளிட்டவை நடக்கிறது. நிறைவாக த.வெ.க. தலைவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு எழுச்சி உரையாற்ற உள்ளார். சுமார் 45 நிமிடங்களுக்கு விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது யதார்த்தமான, புதிய உத்வேகம் கொடுக்கும் பேச்சை கேட்க தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
நீ அரியணை ஏறும் நாள் வரும்:
தாய் ஷோபா வாழ்த்து
மதுரையில் நடைபெறும் விஜயின் மாநாட்டுக்கு அவரது பெற்றோர்கள் ஷோபா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் நேரில் வந்தனர். இன்று காலை மாநாட்டு பந்துக்கு வந்த அவர்களது காரை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “முதல் மாநாடு உன் பலத்தை காட்டியது.. மதுரை மாநாடு உன் படைபலத்தை காட்டுகிறது. திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை, உன் வெற்றிக்கு வானமே எல்லை” என்று தெரிவித்துள்ளார்.
![]()




