சென்னை, ஜன. 22–
பிரதமர் மோடி மதுராந்தகத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு நாளை பேசுகிறார். பிரதமரின் கூட்டத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
பிரதமரின் வருகையையொட்டி நேற்று காலையில் இருந்தே டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை 3 மணிக்கு பேசுகிறார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து மதியம் 1.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்.சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைகிறார். அங்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை வரவேற்கிறார்கள்.
இதன் பிறகு பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் மேடையில் தோன்றுகிறார்கள்.
இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியின் பலத்தை காட்டவும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
உச்சக்கட்ட பாதுகாப்பு
பிரதமர் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நாளை பிற்பகலில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அந்த வழியாக போக்குவரத்தும் தடை செய்யப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மாமண்டூர் மற்றும் மாமல்லபுரம் வழியாக திருப்பி விடப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரை இயக்கி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறக்கி பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். அந்த பகுதி முழுவதுமே மத்திய பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேடையை பார்த்தார்
பியூஸ் கோயல்
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். பொதுக்கூட்டத்திற்கான பிரமாண்ட பந்தல்கள், மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
விழா மேடையை நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் பியூஸ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். இந்த கூட்டம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு முடிவுரை எழுதும் கூட்டமாக இருக்கும். தி.மு.க.வின் ஊழல் நிறைந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் பண்பாடு மற்றும் தமிழக கலாசாரத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி பொதுகூட்டத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் வகையில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஹெலிகாப்டரை இயக்கி அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நாளை பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.
![]()





