செய்திகள்

மணிப்பூரில் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

Makkal Kural Official

இம்பால், செப். 13–

மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு இன்று சென்றுள்ளார்.மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு மாநில நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. .

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழலில் பிரதமர் மோடி, கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இன்று மணிப்பூர் சென்றுள்ளார். முன்னதாக மிசோரம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து மணிப்பூருக்கு சென்றார்.

இம்பால் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா மற்றும் தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் ஆகியோர் வரவேற்றனர். சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு மாநில தலைநகர் இம்பால் மற்றும் சுராச்சந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுராசந்த்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். அதே போல், இம்பாலில் ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி, ராணுவம், மத்தியப் படைகள், மாநில காவல் துறை எனப் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகளில் துப்பறியும் நாய்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரதமரின் மணிப்பூர் பயணம் ஒரு மோசடி நாடகம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். 684 நாள்களாக நீடிக்கும் வன்முறையில் 300 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், வெறும் 3 மணிநேரம் மட்டுமே மணிப்பூர் பயணம் மேற்கொண்டு சாலை வலம் செல்வது காயமடைந்த மக்களை அவமானப்படுத்துவதாகும்” என கார்கே தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *