செய்திகள்

மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி

Makkal Kural Official

திருக்கோவிலூர், ஜன.20-

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திருவண்ணாமலையில் இருந்து அருணாசலேஸ்வரர் சாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று அருணாசலேஸ்வரர் பக்தர்கள் புடைசூழ மணலூர்பேட்டைக்கு வந்தடைந்தார்.

அங்கு விழா குழுவினர்கள், பக்தர்கள் தாரை, தப்பட்டை, மேள, தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, விழா நடைபெறும் தென்பெண்ணை ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு சாமிக்கு தீர்த்தவாரி நடந்தது.

தொடர்ந்து மற்ற சாமிகளுக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்ட பந்தலில் சாமிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவில் மணலூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆற்றுத் திருவிழாவையொட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். தின்பண்டங்களையும் வாங்கி சாப்பிட்டு சென்றனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *