செய்திகள்

‘‘மக்கள் சக்தியால் ஆட்சிப் பீடத்தில் விஜய்’’: செங்கோட்டையன் உறுதி

Makkal Kural Official

சென்னை, நவ. 28:

‘‘அடுத்த ஆண்டில் (2026) மக்கள் சக்தியால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார்’’ என அதன் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உறுதிபடக் கூறியுள்ளார்.

அண்ணா திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து சென்னை பனையூரில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்..தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.

தவெகவில் இணைந்ததையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜய் படங்களுடன் அவரது கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. தனது வாகனத்தில் தவெக கட்சி கொடியையும் வைத்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சி மாற்றத்தை

உருவாக்குவோம்…

அண்ணா தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்சனை உருவாகும். நான் எப்படி செயல்பட்டு இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எந்த நிலையில் நின்று பாடுபடுவேன் என்று நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகத்தில் வெற்றி நடை போடுவதற்கு அயராது உழைப்பேன்.

விஜயுடன் இணைந்து கோபி செட்டிபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வது தொடர்பாக விரைவில் அவருடன் கலந்து பேசி எப்படி பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்வேன்.

இன்று மக்கள் இருக்கின்ற மனநிலையில் அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. மக்களால் நேசிக்கப்படுகிற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார் 2026-ம் ஆண்டு மக்கள் சக்தியால் விஜய் ஆட்சி பீடத்தில் அமருகிற காலம் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *