செய்திகள்

மக்கள் குறைதீர் முகாமில் பரபரப்பு: டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 20–

டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்க வந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது பா.ஜ.க. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்றிருந்தார். அப்போது வரிசையாக மக்கள் நின்று தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் வழங்கிக் கொண்டிருந்தனர்.

முதல்வரின் கன்னத்தில்

அறைந்தார்

அப்போது முகாமில் இருந்த ஒருவர், கையில் ஒரு கோரிக்கை மனுவுடன் முதல்வரிடம் சென்று உரத்த குரலில் கத்தி, பின்னர் முதல்வர் மீது தாக்குதல் நடத்தினார். அந்த நபர் கடுமையாக தாக்கியதில் முதல்வரின் தலையில், கன்னத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் முதல்வரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

முதல்வரை தாக்கிய அந்த நபரை போலீசார் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் 41 வயதான ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் சக்காரியா, ராஜ்கோட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த ஒரு பெண் கூறியதாவது:–

மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்க அனைவருக்கும் உரிமை உண்டு. மனு கொடுக்க வந்த ஒருவர், முதல்வர் ரேகா குப்தா கன்னத்தில் அறைந்தார். இது ஒரு பெரிய விஷயம். நான் அங்கே இருந்தேன். அந்த நபர் முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தாக்கினார். பின்னர் அந்த நபரை போலீசார் கைது செய்தனர் என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திரா சச்தேவா கூறுகையில், “தாக்குதலில் ஈடுபட்டவர் முதல்வர் கையை வேகமாகப் பிடித்து இழுத்துள்ளார். அதில் அவரது தலையில் லேசாக அடிபட்டது. முதல்வர் நலமுடன் இருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் திடீரென நடந்த சம்பவத்தால் முதல்வர் சற்றே அதிர்ச்சியில் உள்ளார். முதல்வர் ரேகா குப்தா ஒரு துணிச்சலான பெண்மணி. அவர் தனது மக்கள் குறை தீர் முகாமை தொடர்வதாக கூறியுள்ளார். மற்றபடி முதல்வர் கன்னத்தில் மர்ம நபர் அறைந்தார், முதல்வர் மீது கல் வீசப்பட்டது போன்ற தகவல்கள் எல்லாம் வெறும் சித்தரிப்பே” என்றார்.

முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை

இந்தத் தாக்குதல் குறித்து டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி, “முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில், எதிர்ப்புக்கு இடமுண்டு, ஆனால் வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளிகள் மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், முதல்வர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார் என்று நம்புகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முதல்வர் முழு டெல்லியையும் வழிநடத்துக்கிறார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவம் பெண்ணின் பாதுகாப்பை அம்பலப்படுத்துகிறது. டெல்லி முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், ஒரு சாதாரண ஆணோ அல்லது சாதாரண பெண்ணோ எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *