செய்திகள்

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை துவக்கினார் எடப்பாடி பழனிசாமி

Makkal Kural Official

மேட்டுப்பாளையம், ஜூலை 7–

முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார்.

கார் மூலம் மேட்டுப்பாளையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட எல்லையில் சின்னகள்ளிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அம்மனை வழிபட்டார். பின்னர் அவர் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

அண்ணா திமுக ஆட்சியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. விவசாயிகள் மனம் குளிரும் அளவிற்கு அத்திக்கடவு– அவினாசி திட்டம் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விரிவாக செயல்படுத்தபடும்.

ரூ.1000 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம் தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்டது. விவசாயிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

அத்திக்கடவு–அவினாசி பழைய திட்டத்தில் பவானி அணை நிரம்பிய பின்புதான் தண்ணீர் எடுக்க முடியும். அதை செயல்படுத்த 15 வருடம் ஆகும். தொட்டிபாலம், டனல் போன்றவை அமைக்க வேண்டும். வனத்துறை அனுமதி வேண்டும். மத்திய அரசு அனுமதி வேண்டும். இப்படி பல பிரச்சினைகள் இருந்தது.

ஆனால் எப்படியாவது விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அண்ணா தி.மு.க. ஆட்சியில் சிறப்பு குழு அமைத்து அத்திகடவு– அவினாசி திட்டம் மாற்று திட்டமாக செயல்படுத்தப்பட்டது.

நான் விவசாயி. இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டு இருக்கின்றேன், அதனால்தான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தியாவிலயே சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதியை பெற்றுக்கொடுத்தது அண்ணா தி.மு.க ஆட்சியில் தான். 25 சதவீதம் மானியம் கொடுத்தும், மத்திய அரசிடம் நிதி பெற்றும் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தோம்.

கால்நடை மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதும் அண்ணா தி.மு.க. ஆட்சியில்தான். அமெரிக்கா சென்று ஆய்வுசெய்து இங்கு வந்து பசு ஆராய்ச்சி செய்ய மையம் தொடங்கினோம். கலப்பினப் பசுவை உருவாக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்த முயற்சித்தோம். ஆடு, மீன், பன்றி, கோழி வளர்ப்பு எல்லாமே அங்கு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. விவசாயிகளை நேரடியாக அழைத்துச்சென்று பயிற்சி அளிக்க முயற்சித்தோம். ஆனால், அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் எல்லாம் கிடப்பில் போடப்பட்டது.

பசுக்களை இலவசமாக விவசாயிகளுக்கு கொடுத்ததும் அண்ணா தி.மு.க. ஆட்சியில்தான். கால்நடைகளுக்கு நோய் வருவதற்கு முன்பாக அதைத் தடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எவ்வாறெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள ஒரு மையம் அமைத்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியதும் அண்ணா தி.மு?க. ஆட்சியில்தான்.மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்டது. இப்போது அதற்கும் கட்டுப்பாடு வந்து விட்டது. வண்டல் மண் எடுப்பதற்கும் இந்த ஆட்சியில் இப்போது விடுவதில்லை.வனத்துறைக்கு அருகில் இருக்கும் பயிர்கள் வனவிலங்குளால் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் அண்ணா தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்டது. நிறைய திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றது.

செங்கல் சூளை

செங்கல் சூளை தொடர்பான கோரிக்கைகள் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால் தி.மு.க. ஆட்சியில் 4 முறை மின்கட்டண உயர்வால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேரளாவில் இருந்து தண்ணீர் உரிமையை பெறுவது உள்ளிட்டவை குறித்தும் பேசப்படும். நதிகளை பாதுகாக்க 11,500 ஆயிரம் கோடி நிதி கிடைத்து உள்ளது. இது அண்ணா தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் காரணம்.

அண்ணா தி.மு.க. அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. எப்போதும் நாங்கள் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம், இப்போது சொன்னால் வெளியில் தெரிந்து விடும்.

விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களின் கோரிக்கை மனுக்களின் மீது வரும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *