கடலூர், ஜூலை.13-
மக்களை கடனில் தத்தளிக்க விட்டதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார் அண்ணா தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, 5-வது நாளான நேற்று, கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். கடலூரில் உழவர் சந்தை பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்தியாவில் நான்தான் சூப்பர் முதலமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார். எதில் தெரியுமா? கடன் வாங்குவதில் தான் அவர் சூப்பர் முதலமைச்சர். மகளிருக்கான ஆயிரம் ரூபாய் கூட, அரசாங்கத்தின் வருவாயை அதிகரித்து கொடுக்கவில்லை. கடன் வாங்கித்தான் கொடுக்கிறார். இதை எப்படி திருப்பி கட்டுவது? இது உங்கள் மீது தான் வந்து இறங்கும். 2021-ம் ஆண்டு தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக இருந்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இந்த ஆண்டு (அதாவது 2025–26) சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாக திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அப்படியெனில் 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்கி இருப்பார். இதன் மூலம் இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலம் என்கிற நிலைக்கு தமிழகம் வரும்.
இதற்காகவா உங்களிடம் ஆட்சியை கொடுத்தார்கள்?. இப்படி கடன் மேல் கடன் வாங்கினால், மக்கள் மீது வரி சுமத்தி தான் இந்த கடனை திருப்பி அடைக்க முடியும்.
தற்போது தமிழகத்தின் மொத்த கடன் கிட்டத்தட்ட 10 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கருதுகிறேன். இப்படி கடன் மேல் கடன் வாங்கி, நாட்டு மக்களை கடனில் தத்தளிக்க விட்டதுதான் தி.மு.க. அரசின் சாதனை.
மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், ஆனால் தற்போது மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. அதாவது 52 சதவீதம் கட்டணம் உயர்ந்துவிட்டது. ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் மீது சுமையை ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் சொன்னதை செய்யவே மாட்டார்கள். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க.வினர். திரைப்பட துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எங்கும் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன். நடக்கிறதா இல்லையா?
நான் உங்களை ஏமாற்றி வாக்கு வாங்குவதற்காக வரவில்லை. நான் பேசியதை சிந்தித்து பாருங்கள். உங்களுக்கே தெரியும்.
மீனவர்களுக்கும் அதிகமான திட்டங்களை கொண்டுவந்தோம். மீன்பிடி தடைகாலத்தில் கொடுக்கப்பட்ட நிதியை உயர்த்தி வழங்கினோம். மேலும் உயர்த்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள். அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், உயர்த்தி வழங்கப்படும். டீசல் மானியமும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு உயர்த்தி வழங்கப்படும்.
இதுவரைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் இல்லை. இப்போது தான் அவர் உங்களுடன் ஸ்டாலின் என்று வருகிறார். 4½ ஆண்டுகாலம் மக்கள் மீது வராத அக்கறை, தேர்தல் நெருங்குவதால் மக்களின் ஞாபகம் முதலமைச்சருக்கு வந்துள்ளது.
மக்களிடம் ஓட்டு்களை பெறுவதற்காக மு.க.ஸ்டாலின் தந்திரமாக அரங்கேற்றும் நாடகம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். ஸ்டாலின் அரசு ‘பெய்லியர் மாடல்’ அரசாகிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல்ரஹீம் உள்பட பலர் உடனிருந்தனர்.
210 இடங்களில்
வெற்றி பெறுவோம்
இதனையடுத்து பண்ருட்டியில் நான்கு முனை சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த கூட்டத்தை பார்க்கும்போது பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வெற்றி பெற்றுவிட்டது. நான் 5-வது நாளாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 12-வது தொகுதியாக உங்களை சந்திக்கிறேன். எந்த தொகுதியிலும் இந்த அளவுக்கு மக்கள் வந்ததில்லை. உங்களின் இந்த எழுச்சி நமது வெற்றிக்கான அறிகுறியாகும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணி, அண்ணா தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப்பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதற்கு பண்ருட்டி நகர மக்களே சாட்சி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெற்றிப்பெறுவோம் என்று பேசுகிறார். நான் கூறுகிறேன், அண்ணா தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெற்றிப்பெறும்.
விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். அந்த வகையில் வெற்றியின் ரகசியம் உங்களது எழுச்சியில் பார்க்க முடிகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காண்பது பகல் கனவு.
அண்ணா தி.மு.க. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. உங்களது கட்சி கார்ப்ரேட் கம்பெனி. சிலர் தமிழ்நாட்டை பட்டாப்போட பார்க்கிறார்கள். இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், தி.மு.க.வுக்கு மரண அடி கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்.
இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மைகளை செய்தார்கள். ஒன்றும் இல்லை, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கியது தான் அவர்களது சாதனை.
சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து, ஏழை மக்களின் நிலையை புரிந்து கொண்டு மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை கொடுக்கிறார். இதற்கெல்லாம் முடிவு கட்டுகின்ற தேர்தலாக வருகிற தேர்தல் இருக்க வேண்டும்.
எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், கருணாநிதி குடும்பம் வளமாக வாழ வேண்டும். அவர்களது குடும்ப கஜானாவுக்கு வருமானம் வர வேண்டும் என்று தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை அறிவிக்கிறார்.
தி.மு.க.வின் கடந்த 50 மாத ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்டுவது என்பது கனவாக மாறிவிட்டது. மக்களை ஏமாற்றிய விடியா தி.மு.க. அரசுக்கு சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்டுங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் என்கிறார், நாங்கள் எப்போதும் மக்களுடன் எடப்பாடி என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தீயசக்தி தி.மு.க.வை விரட்டி அடிப்போம். ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் மலர செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கடலூர் வடக்கு மாவட்ட தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், விவசாயிகள், வியாபாரிகள், பொதுநல சங்க உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி புதுச்சோயில் உள்ள ஒரு ஓட்டலில் கலந்துரையாடினார்.
![]()





