செய்திகள்

மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவில்லை :

Makkal Kural Official

சென்னை, ஜூலை 2–

மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காத தி.மு.க. அரசிற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஒரு திட்டம் தீட்டப்பட்டு அந்தத் திட்டத்தின் பயன்கள் மக்களை சென்றடைந்தால் தான் அது திட்டம் என்று கருதப்படும். ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான நிலை நிலவுகிறது. 2021–ம் ஆண்டு முதல் 2025–ம் ஆண்டு வரை ஐந்து நிதிநிலை அறிக்கைகளை தி.மு.க. அரசு சமர்ப்பித்துள்ளது. மேற்படி நிதிநிலை அறிக்கைகளில் 8,500 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், அறிவிப்பில் கால் பகுதி பேருந்துகள்கூட வாங்கப்படவில்லை என்பதுதூன் நிதர்சனமான உண்மை.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் கூற்றுப்படி மேற்கு தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம், முடிச்சூர், வண்டலூர் போன்ற பகுதிகளுக்கு பிற்பகல் ஏழு மணி முதல் எட்டு மணி வரை, அதாவது ஒரு மணி நேரத்தில் 12 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.

மேற்கு தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம், முடிச்சூர், வண்டலூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துக்காக குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை இருப்பதாகவும், அவ்வாறு வரும் பேருந்தில் ஏற முடியாத அளவுக்கு கூட்டம் அலை மோதுவதாகவும், இதனால் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் ஏற முடியாத அவல நிலை நிலவுவதாகவும், காலை வேளையில் தேவையான நேரத்தில் பேருந்துகளே வருவதில்லை என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு

ரூ.50 செலவு…

இதன் காரணமாக பெரும்பாலான பயணிகள் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 40 முதல் 50 ரூபாய் செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஏழையெளிய மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, தானியங்கி வாகன இருப்பிட முறையில் உள்ள தவறு, சில நிலைய மேலாளர்கள் பேருந்துச் சேவையை முறையாக கண்காணிக்காதது, உள்ளூர் ஒழுக்கமின்மை போன்றவற்றை காரணங்களாக கூறுகின்றனர். சாலைப்பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் போன்றவை காரணமாக பயண நேரம் அதிகமாகிவிட்டதாகவும், புதிதாக 1,500 கூடுதல் பேருந்துகளை வாங்க இருப்பதாகவும் போக்குவரத்துக் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதிலிருந்து, மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதும், புதிய பேருந்துகள் நிதிநிலை அறிக்கையில் சொன்னதற்கேற்ப வாங்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. இதன் காரணமாக அவதிப்படுபவர்கள் ஏழையெளிய மக்கள்தான். மொத்தத்தில், தமிழ்நாட்டில் பேருந்துகள் இயங்கும் எண்ணிக்கை என்பது காகித வடிவில்தான் இருக்கிறது என்பதை கள யதார்த்தம் சுட்டிக்காட்டுகிறது.

எனவே, முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மேற்கு தாம்பரத்திலிருந்து அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நிலைமையை கண்காணிக்கவும், கடந்த நான்கு ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய பேருந்துகள் குறித்த புள்ளி விவரங்களை தெரிவிக்கவும், தேவைக்கேற்ப புதிய பேருந்துகளை வாங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *