காமராஜர் பிறந்த 15-ந் தேதி துவக்கம்
சிதம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை, ஜூலை.6-
மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை காமராஜரின் பிறந்தநாளான வருகிற 15-ந் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கிறார்.
தமிழக மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் பணிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அந்த வகையில் அவர், கடந்த மாதம் 16-ந் தேதி அன்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, மக்களின் குறைகளை தீர்க்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் ஜூலை 15-ந் தேதி தொடங்கப்படும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தையும், அதன் முதல் முகாமையும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் வருகிற 15-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார். 15-ந் தேதி காமராஜரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறப் பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்பட உள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டையும், விண்ணப்பத்தையும் வழங்குவார்கள்.
மகளிர் உரிமைத் தொகை பெற
விண்ணப்பிக்கலாம்
மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணி 3 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
15-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, எதிர்க்கட்சியாக தி.மு.க. சார்பில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![]()





