ராணிப்பேட்டை, டிச. 24–
ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் சக்தி சங்கமம் சார்பில் திமிரி வட்டாரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சியான கல்லூரி சந்தை நிகழ்ச்சியை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
மகளிர் சுய உதவிக்குழுக்கள் அரசின் மூலம் வங்கிக்கடனுதவி பெற்று தொழில்துவங்கி தங்கள் உற்பத்தி பொருட்கள் செய்து சுயமாக வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கும், தங்கள் திறனை அதிகரித்துக் கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி ஒருவாய்ப்பாகவும் அனுபவமாகவும் அமையும். மாணவியர்கள் மகளிர் குழுக்களிடம், அவர்களின் உற்பத்தி, சந்தைப்படுத்துதல், நிகர வருமானம், வங்கி கடனுதவி, எத்தனை வருடங்களாக குழு செயல்படுகின்றது உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடி தெரிந்து கொள்ளலாம். இக்கண்காட்சி வட்டார அளவில், மாநில அளவில், தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றது. நமது இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த மகளிர் குழுக்கள் இதுபோன்ற கண்காட்சிகளில் நன்கு திறன்பட செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின உற்பத்தி பொருட்களான அழகுசாதனங்கள், பொம்மைவகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள், கைத்தறி சேலை வகைகள், தானிய உணவு வகைகள், ஊறுகாய் வகைகள் போன்ற வீட்டு உபயோகப்பொருட்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செந்தில்குமரன், உதவி திட்ட அலுவலர்கள் அருண்குமார், சிவகுமார், வட்டாட்சியர் மகாலட்சுமி, கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
![]()





