சென்னை, ஜூலை 2–
திருப்புவனத்தில் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா தமிழக அரசு வழங்கியது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் மரணம் அடைந்த அஜித்குமார் சகோதரருக்கு பணி நியமன ஆணையினையும் அக்குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் நேரில் சென்று வழங்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் மரணம் அடைந்த அஜித்குமார் என்பவரின் குடும்பத்தாரிடம், நேற்றையதினம் (1–ந் தேதி) அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், இன்றையதினம் சிவகங்கை மாவட்ட கலெக்டர் கா.பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பணி நியமன ஆணையினை மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு (வயது 27), சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிட், காரைக்குடி டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
-மேலும், தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட புல எண். 40-11-ன் படி 0.01.20 ஏர்ஸ் (3 சென்ட்) பரப்பளவில், அஜித்குமார் தாயார் மாலதிக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம்
அப்போது அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:– அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் வழங்கி உள்ளோம். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் விரைந்து விசாரித்து ஞானசேகரனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது போல இளைஞர் அஜித்குமாரின் வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என்றார்.
![]()





