மதுரை, ஜூலை 3–-
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். நீதி கிடைக்க துணை நிற்போம் எனவும் உறுதி அளித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 27) என்ற கோவில் காவலாளி, காரில் இருந்த நகைகள் மாயம் குறித்த புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை போலீசார் அடித்துக்கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் மடப்புரத்தில் உள்ள அஜித்குமார் வீட்டுக்கு நேற்று சென்றனர். அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்போனில் அவர்களிடம் பேசினார்.
அப்போது, “மனித மிருகங்கள் தாக்கியதால் உங்கள் மகன் அஜித்குமார் இறந்து விட்டார். தைரியமாக இருங்கள் அம்மா. உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அண்ணா தி.மு.க.வும், நாங்களும் உங்களுக்கு துணை நிற்போம். இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன் மகனை இழப்பது கொடுமையான விஷயம். இந்த சம்பவத்தை யாராலும் மன்னிக்க முடியாது.
பெற்ற தாய்க்குத்தான் மகனை இழந்த வருத்தம் தெரியும். அதனால், நீங்கள் மனம் தளராமல் இருங்கள். நாங்கள் எவ்வளவு ஆறுதல் கூறினாலும் ஈடாகாது. இருப்பினும் நீங்கள் மனநிம்மதியாக இருந்தால்தான், வீட்டில் இருப்பவர்களும் மனநிம்மதியாக இருப்பார்கள்.
கோர்ட்டில் அண்ணா தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதன் மூலம் நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும். அஜித்குமார் இறப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நீதி நிலைநாட்டப்படும். எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் செல்போனில் பேசினார்.
![]()





