சென்னை, ஜன. 11:
போரூர்- – வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. 2ஆம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. இதில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
போரூர் –- வடபழனி மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் காலதாமதம் ஆனது. இந்நிலையில், போரூர் – வடபழனி இடையே 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்று முழு ரயிலையும் இயக்கும் சோதனை ஓட்டத்தை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது. போரூர் -– வடபழனி வழித்தடத்தில் ஏற்கனவே ரயில் என்ஜின் சோதனையும் நடத்தப்பட்டு, ரயில் பாதை வடிவமைப்புக்கான உறுதிச் சான்று பெறப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. நேற்றைய தினம் ஒருங்கிணைந்த கணினி சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.
இரட்டை அடுக்கு
மேம்பாலம்
இதில் போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமைந்துள்ளன. இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரெயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும்.
ஏற்கனவே பூந்தமல்லி- – போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் இன்று போரூர்- – வடபழனி இடையே சோதனை நடைபெற்றது. போரூர் -– வடபழனி வரையிலான 6 கி.மீ., வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. போரூரிலிருந்து கிளம்பிய ரெயில் 5 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வடபழனி வந்தடைந்தது. தண்டவாளத்தின் செயல் திறன், பிரேக்கிங் சிஸ்டம் குறித்து கண்காணிக்கப்பட்டது. 45 நிமிடமாக நடைபெற்ற சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()





