திருவள்ளூர், டிச. 30:
தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருத்தணி தொகுதியில் எழுச்சியுரை ஆற்றினார். இதையடுத்து திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் – ஊத்துகோட்டை சாலை புதிய பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
‘’அண்ணா திமுக கூட்டணி அடுத்தாண்டு தேர்தலில் 210 இடங்களில் வெல்லும் என்பதற்கு இங்கிருக்கும் மக்களின் எழுச்சியே சாட்சி.
அண்ணா திமுகவைப் பார்த்து ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். அண்ணா திமுகவில் கூட்டணி இல்லை என்கிறார். உண்மையில் உங்கள் கூட்டணி பலவீனம் ஏற்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே, காங்கிரஸ் வேறொருவருடன் பேசிக்கொண்டிருப்பதாக செய்தி. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும், செல்வப்பெருந்தகையும் ஆட்சியில் பங்கு கேட்போம் என்கிறார்கள். திருமாவளவனும் காலச்சூழலுக்கு ஏற்ப கோரிக்கை வைப்போம் என்கிறார். இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கம்யூனிஸ்ட் சண்முகம் சொல்கிறார்.
ஸ்டாலின் அவர்களே அண்ணா திமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும், அண்ணா திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 2011–-21 வரை 10 ஆண்டுகள் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம். சிறப்பான ஆட்சி வழங்கினோம். மதச்சண்டை, ஜாதிச்சண்டை கிடையாது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.
போதை மாநிலமாக தமிழகம்
இன்று போதை பல்வேறு வடிவங்களில் விற்பனையாகிறது. தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. இதை தடுக்க வக்கில்லை. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பலமுறை நாங்கள் சொல்லிவிட்டோம். போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாத திறமையற்ற பொம்மை முதல்வர் ஆள்வதால் தான் இந்த நிலைமை.
எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு பொதுவெளியில் பேசுகிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசுகிறார். நான் பேசவில்லையா..? நீங்கள் வாய்ப்புக்கொடுப்பதில்லை, வாய்ப்பு கொடுத்தாலும் சபாநாயகர் என் கருத்தை நீக்கிவிடுகிறார். முதல்வர் கருத்துதான் பதிவாகிறது. நாங்கள் கேட்பதை ஒளிபரப்பு செய்வதில்லை. முதல்வர் பேசுவது மட்டும் தான் ஒளிபரப்பு செய்கிறீர்கள். அதிமுக ஆட்சி சாதனையை சொல்கிறோம், திமுக அவர்களின் சாதனையை சொல்லட்டும், மக்கள் முடிவெடுக்கட்டும்.
தில்லு திராணி இருந்தால் நான் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள். ஆளுநர் உரை ஜனவரி 20ம் தேதி வரப்போகிறது, நான் பேசுவேன், நேரடி ஒளிபரப்பு செய்ய முடியுமா? செய்யுங்க பார்க்கலாம்.
திமுக ஆட்சியில்
210 அரசுப் பள்ளிகள் மூடல்
கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசும்போது, அண்ணா திமுக ஆட்சியில் 5% வாக்குறுதி தான் நிறைவேற்றப்பட்டது என்று பச்சைப்பொய் சொல்கிறார். உங்கள் தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்பு வெளியிட்டீர்கள். நான்கில் ஒரு பாகம் கூட நிறைவேற்றவில்லை, கம்யூனிஸ்ட் கட்சியே விமர்சிக்கிறார்கள். இப்படி ஆட்சி செய்துவிட்டு அண்ணா திமுக மீது பழி சுமத்துகிறீர்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். அண்ணா திமுக ஆட்சியில் 248 துவக்கப் பள்ளிகளை தொடங்கினோம். ஸ்டாலினுக்கு சேலஞ்சாக சொல்கிறேன், கேட்டுக்கோங்க, தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
248 ஆரம்பப்பள்ளிகள், 117 துவக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினோம், 1079 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினோம், 604 உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருக்கிறோம். இப்படி அதிமுக ஆட்சியில் பள்ளிகளை அதிகம் பேர் கல்வி கற்கும் சூழல் உருவாக்கினோம். உங்கள் ஆட்சியில் எத்தனை பள்ளிகள் திறந்தீர்கள்..? திமுக ஆட்சியில் 210 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கிறது, அதுதான் சாதனை.
இன்று 96 கலைக்கல்லூரிக்கு முதல்வரே இல்லை. இப்படிப்பட்ட பரிதாபமான நிலை. சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு போதிய ஆசிரியர் நியமிக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை, ஏனென்றால் லஞ்சம் கேட்கிறார்கள். அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆசிரியர்கள் அலுவலர்கள் நியமிக்க அனுமதி இல்லை.
ஒரே ஆண்டில்
11 மருத்துவ கல்லூரி
அதிமுக ஆட்சியில் நாங்கள் செய்த சாதனை, ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி 400 கோடியில் கொண்டுவந்தோம், மக்களை நெஞ்சை நிமிர்த்தி சந்திக்கிறோம். உங்களால் ஒரு திட்டமாவது கொண்டுவர முடிந்ததா?
அம்மா இருக்கும்போது 6 மருத்துவக் கல்லூரி, மொத்தம் 10 ஆண்டுகளில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்தோம். ஒரு கல்லூரி கொண்டுவர திராணி இருக்குதா? நீங்கள் எங்களை சேலஞ்ச் செய்கிறீர்கள். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். இனிமேல் வரமுடியாது. நான்கரை ஆண்டுகள் கொள்ளையடிப்பதில் தான் குறிக்கோளாக இருந்தனர்.
10 ஆண்டுகளில் 7 சட்டக்கல்லூரி, திருவள்ளூரிலும் ஒன்று, 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்து, இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்று 2030ம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டது தமிழ்நாடு. இப்படி ஒரு சாதனை இருக்கிறதா?
விருதுகள் குவிந்தன
அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகள் பெறப்பட்டிருக்கிறது. உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளும், போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வித்துறை என இப்படி பல துறைகளிலும் விருதுகளை அள்ளியிருக்கிறது அதிமுக அரசு. அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான். மேலும், தமிழகத்தில் அதிக உணவுதானிய உற்பத்தியைப் பெருக்கி, 100 லட்சம் மெட்ரிக் டன் மேல் உற்பத்தி செய்து, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு.
ஆட்சிக்கு எதிராக
போராட்டங்கள்
உள்ளாட்சித்துறையில் நடந்த ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்ய இ.டி கடிதம் அனுப்பியது, இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் இ.டி சொன்னதுபோல எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, அதனால் போராடுகிறார்கள். செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சொன்னார்கள் செய்யவில்லை, அதனால் போராடினார்கள், கைதுசெய்து சித்ரவதை செய்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செவிலியர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை, ஆட்சி முடியப்போகிறது. இந்த இறுதி கட்டத்தில் இப்போதாவது ஏழை மக்கள் மகிழ்ச்சியோடு தைப்பொங்கல் கொண்டாட 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
மின் கட்டணம், வரி உயர்வு செய்ததுடன் நில்லாமல் சிறுபான்மை மக்களை திட்டமிட்டு ஏமாற்றுகிறது திமுக. அதிமுக ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி, எல்லா மதத்தையும் சமமாகப் பார்க்கிறோம், எங்கள் ஆட்சியில் ஜாதி, மதச் சண்டை இல்லை. திமுக ஆட்சியில் குளறுபடி செய்கிறார்கள். அதிமுக ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். அவர்கள் நிம்மதியாக வாழ்ந்த பூமி.
2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு எடப்பாடி பேசினார்.
![]()





