சென்னை, ஜூலை.9-
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பிரதீப்குமார் என்பவர் கைதானார். மேலும் அவருக்கு போதைப்பொருளை சப்ளை செய்த ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் என்பவரும் ஓசூரில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் சிக்கினார். இதனையடுத்து ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவும் சிக்கினார். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து இருவரும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நடந்தது. ஸ்ரீகாந்த் தரப்பில் மூத்த வக்கீல் ஜான் சத்யன், கிருஷ்ணா தரப்பில் வக்கீல் இன்பன்ட் தினேஷ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது ‘ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட வில்லை’ என தெரிவித்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருவரும் 2 வாரத்துக்கு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இதன்பின்பு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும்’ என நீதிபதி நிபந்தனை விதித்தார்.
![]()





