செய்திகள்

பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ நடத்த கட்டுப்பாடுகள்

Makkal Kural Official

இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு

சென்னை, நவ.6–

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவர இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு செய்யப்பட்டது.

கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் இதுபோன்ற ரோடு ஷோக்களுக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுத்தது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க சென்னை ஐகோர்ட் சமீபத்தில் அறிவுறுத்தியது.அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, கடந்த அக்டோபர் 27ம் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட் ‘அரசியல் கட்சித் தலைவர்களின், ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும்’ என கெடு விதித்தது.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘கரூரில் நடந்தது போன்ற துயரம் இனி நடக்காமல் இருக்க, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும். அது இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் இருக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை 10–வது தளத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

20 கட்சிகள் பங்கேற்பு

அதன்படி அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க., அண்ணா தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க., த.வா.க., ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல். ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றனர்.

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

கூட்டம் நடத்த

ரூ.20 லட்சம் டெபாசிட்

இதன்படி, அனைத்து கட்சிகளுக்கும் குறைந்தது 5 நாள்களுக்கு முன்னதாக கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும். கூட்டத்திற்கு டெபாசிட் தொகையாக அதிகபட்சம் ரூ. 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேதங்கள் ஏற்பட்டால் ஈடு செய்யும் வகையில் இந்த தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 5,000 பேருக்கு மேல் வரும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.5000–10,000 பேர் இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.10,000 முதல் 20,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 3 லட்சம், 20,000 – 50,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 5 லட்சம், 50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி, ஒரே இடத்தை ஒன்றுக்கும் அதிகமானோர் கேட்டால் யார் முதலில் அனுமதி கோருகிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை போன்ற விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.இந்த விதிகளுக்கு கட்சிகள் தங்களுக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

2 மணி நேரத்துக்கு

முன் வராதீர்கள்

பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளை கண்காணிக்க குழு அமைப்படும் என்றும், மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டத்தில் போலீசாரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும், பொதுக்கூட்டங்களை கண்காணிக்க மற்றும் அனுமதி வழங்க குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் நிகழ்ச்சிக்கு முன் 2 மணி நேரத்திற்கு மேல் மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களை 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்த 10 நாட்களுக்கு முன்பும் 15 நாட்களுக்கு மிகாமல் அனுமதி கோர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பங்கேற்ற தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொது அவர் கூறியதாவது:–

அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் நானும் என்.ஆர். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று பேசினோம். அம்பேத்கர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் பேச்சு, எழுத்து உரிமை வேண்டும். ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக கூடும் உரிமை அனைவருக்குமே உள்ளது. நீதிமன்ற பரிந்துரைகள் ஏற்ற வகையில் இருக்க வேண்டும். ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த கண்டிஷன் போட்டாலும், அடிப்படை உரிமைகளை மீறாமல் இருக்க வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பின்னர் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும், மேலும் ஏதேனும் மாற்றம் இருந்தால் திருத்தப்படும்” என்று அவர் கூறினார்.

இதனிடையே ரோடு ஷோ நடத்தக்கூடாது என்று சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *