சென்னை, ஜன. 14–
பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 6.90 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன..இதன்படி, ஜன. 9 ஆம் தேதி முதல் ஜன. 13–ம் தேதி வரை நள்ளிரவு நேரம் வரை, மொத்தம் 15,762 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.90 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 2,73,152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இன்று 5 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் போக்குவரத்து நெரிசல்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து வரும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதனால் கிளாம்பாக்கம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பெருங்களத்தூர், வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிகவும் மெதுவாகவே நகர முடிந்தது. இதனால் பயணிகள் தங்களது இலக்கை அடைய கூடுதல் நேரமானது.
மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நேற்று இரவு முதலே சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கார்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக ஏராளமானோர் பயணம் மேற்கொண்டனர். இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்தது.
நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சுங்கச்சாவடியில் கூடுதலாக 7 வழிகள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சீராகச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
7 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள்
இன்று அதிகாலை போகி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கிராமப்புறங்களில் பழைய பொருட்கள் மற்றும் துணிகளை மக்கள் எரித்தனர். இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்துடன், அதிகாலை நேரப் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் நிதானமாகச் சென்றனர். கடும் போக்குவரத்து நெரிசலால் 7 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் நின்றன.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான நுழைவாயிலாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி திகழ்கிறது. நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை மட்டும் சுமார் 60,000 வாகனங்கள் இந்தச் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
![]()





