அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, ஜன.7-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 38 ஆயிரத்து 175 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபுசங்கர், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன், போக்குவரத்துத் துறை ஆணையர் கிரண் குராலா, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து அதிகார அமைப்பின் (கும்டா) உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 10 ஆயிரத்து 245 சிறப்பு பஸ்கள் என 6 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 22 ஆயிரத்து 797 பஸ்களும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 11 ஆயிரத்து 290 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 34 ஆயிரத்து 87 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் பயணிளுக்காக 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் 6 ஆயிரத்து 820 சிறப்பு பஸ்கள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15 ஆயிரத்து188 பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 9 ஆயிரத்து 820 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 8 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
சென்னை கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் சிறப்பு பஸ்களும், கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதே போன்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை (இ.சி.ஆர்.), காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்களும், மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பஸ்நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in மற்றும் அதிகாரப்பூர்வ செயலி மற்றும் 94440-18898 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புதிய பஸ் நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து ஓ.எம்.ஆர்., திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





