சென்னை, டிச.19:
“சாதி ஒழிப்பே சமூக விடுதலை” என்னும் தலைப்பில் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர்கள் பி.கீதா ஜீவன், கோவி. செழியன் ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள்.
“சமூக சமத்துவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் மேம்படுத்தும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், சீரிய சமூகத்தை அமைக்க வழிவகுக்கவும், மாணவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக நீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடனும் சமூக சீர்திருத்தத் துறையின் கீழ் இயங்கும் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு, சமூக நீதி நாளான செப்டம்பர் 17–ம் நாளினை முன்னிட்டு “சாதி ஒழிப்பே சமூக விடுதலை” என்னும் தலைப்பில் தமிழகம் முழுவதும் 5 மையங்களில் 38 மாவட்டங்களில் 180 கல்லூரிகளை பங்கேற்கச்செய்து ஒவ்வொரு மையத்திலிருந்தும் ஐந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் கடந்த 16–ந் தேதி அன்று இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.
இறுதிப்போட்டியில் சிறப்பான பேச்சாற்றல் மிக்க 11 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு ரூ.1 லட்சம்- காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பயிலும் அ.சார்மதி என்பவருக்கும் இரண்டாம் பரிசு தலா ரூ.50 ஆயிரம்- தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி கல்லூரியில் பயிலும் ஜீ.பிரைசிங் ஜோஷ்வா மற்றும் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் வீ.ஜெயலட்சுமி என்பவருக்கும்,
மூன்றாம் பரிசு தலா ரூ.25 ஆயிரம்- சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் பயிலும் அ.நேஹாசாரின், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பயிலும் அ.மாதரசி மற்றும் திண்டுக்கல், ஜி.டி.என். கலைக்கல்லூரியில் பயிலும் அ. சுஹாசினி ஆகியோருக்கும் ஆறுதல் பரிசு தலா ரூ.10 ஆயிரம்,- 5 மாணவர்களுக்கும் என 11 மாணவர்களுக்கு நேற்று சென்னை, அண்ணா சாலை, தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் கூட்ட அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சமூக நலத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பரிசு வழங்கினார்கள்.
![]()





