செய்திகள்

பெருங்குடி, கொடுங்கையூரில் 48.41 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டது

Makkal Kural Official

சென்னை, டிச. 11:

சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 48.41 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி 100.29 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தின் 250 ஏக்கர் ஆகும். இதில் 225 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இதில் 27.50 லட்சம் டன் அளவில் திடக்கழிவுகள் உள்ளது என கணக்கிடப்பட்டது. இத்திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றி நிலத்தினை மீட்டெடுக்க ரூ.350.65 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக 6 தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பயோமைனிங் முறையில் திடக்கழிவுகளை அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் 2022–ம் ஆண்டு முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 3 தொகுப்புகளில் 15.57 லட்சம் டன் திடக்கழிவுகளும், இதர 3 தொகுப்புகளில் 10.78 லட்சம் டன் திடக்கழிவுகளும் என 26.35 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, 94.29 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதர திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் விரைந்து அகற்றிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் பரப்பளவு 342.91 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. முதலமைச்சர் உத்தரவின்படி, ரூ.641 கோடி மதிப்பீட்டில் கொடுங்கையூரில் உள்ள திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து அகற்றும் பணி 6 தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கடந்த 2024–ம் ஆண்டு முதல் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய திடக்கழிவுகள் 66.52 லட்சம் டன் ஆகும். அதில் இதுவரை 22.06 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது. தொகுப்பு 1, 2, 4 மற்றும் 6ன் வாயிலாக சுமார் 6 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

3 ஏக்கர் பரப்பில்

சுற்றுவேலி

மீட்டெடுக்கப்பட்ட இந்த நிலத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சென்னை மாநகராட்சியின் வாயிலாக ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இவ்வாறாக பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களிலிருந்து இதுவரை 48.41 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி 100.29 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *