செய்திகள்

பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம்: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 4–-

சென்னையில் பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படுகிறது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-–

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளின் விரைவான சேவைக்காகவும், போலி பாஸ்போர்ட்டுகளை குறைப்பதற்காகவும், பொதுமக்களின் தரவுகளை பாதுகாப்பதற்காக ‘சிப்’ பொருத்திய மின்னணி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தவகை பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 2,500 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகிறது. ‘சிப்’ இல்லாத பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் வெளிநாடுகளுக்கு தங்குதடையின்றி சென்று வரலாம்.

சாதாரண பாஸ்போர்ட் 30 நாட்களிலும், தட்கல் பாஸ்போர்ட் 7 நாட்களிலும் வழங்கப்படுகிறது. சென்னையில் சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா உள்ளது. இதுதவிர 13 தபால் அலுவலகங்களில் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்ளது. தற்போது புதிதாக சென்னையில் பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு புதிய மையங்கள் தொடங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் பாஸ்போர்ட் தேவை அதிகமாக இருக்கிறது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை பொறுத்த வரையில் வேலூர் மாவட்டத்தில் பாஸ்போர்ட் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் பொதுமக்களை பொறுத்தவரையில் பாஸ்போர்ட் பெறுவது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதனால் கடைநிலை மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக நடமாடும் பாஸ்போர்ட்டு சேவை மையம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சரிபார்க்க வரும் போலீசார் பணம் கேட்பது குறித்து முறையாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை தொடர்ந்து தற்போது வருகிற 7-ந்தேதியில் இருந்து 9-ந்தேதி வரை 3 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடமாடும் பாஸ்போர்ட்டு சேவை மையம் முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்று விண்ணப்பங்களை அளிக்க விரும்புகிறவர்கள் சென்னை மண்டல பாஸ்போர்ட் இணையதள முகவரியில் சென்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக முகாம் என்ற பக்கத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *