செய்திகள்

பெரம்பூர்–அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய ரெயில் பாதை: ரெயில்வே வாரியம் ஒப்புதல்

Makkal Kural Official

சென்னை, ஜூலை.19-

பெரம்பூர்-–அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மற்றும் 6-வது புதிய ரெயில் பாதைகள் அமைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடமாவட்டங்களுக்கு சென்டிரலில் இருந்து தான் பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படுகிறது. எனவே, பெரம்பூர் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதற்காக, பெரம்பூர் ரெயில் நிலையம் ரூ.360 கோடியில் 4-வது புதிய ரெயில் முனையமாக மாற்றப்பட உள்ளது. இங்கு பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது.

பெரம்பூர் ரெயில் நிலையத்தை ரெயில் முனையமாக மாற்றிட, ரெயில்வே வாரியத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியது. பெரம்பூர்-–அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5, 6-வது புதிய ரெயில் பாதைகள் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், பெரம்பூர் ரெயில் நிலையத்தை 4-வது புதிய முனையமாக மாற்றவும், கூடுதலாக 5, 6-வது பாதைகள் அமைக்கவும் ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

பெரம்பூர் ரெயில் நிலையத்தை 4-வது ரெயில் முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரெயில்வே வாரியத்திடம் வழங்கப்பட்டது. ரூ.360 கோடியில் 4-வது புதிய முனையம் அமைப்பதற்கான இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2028-ம் ஆண்டு இறுதிக்குள் புதிய ரெயில் முனைய பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

பெரம்பூர்-–அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய ரெயில் பாதைகளும் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய பாதைகள் அமையும்போது, அம்பத்தூரில் இருந்து பெரம்பூருக்கு தடையின்றி ரெயில்களை இயக்க முடியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *