பெரம்பலூர், ஜன. 27:
பெரம்பலூர் அருகே பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி வெள்ளைகாளி. இவர் மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு ஒன்றில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளைகாளி ஆஜர்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பின்தொடர்ந்து இரண்டு கார்களில் ரவுடி கும்பல் வந்துள்ளது.
இந்நிலையில், போலீசார் பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை பகுதியில், சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த கும்பல் வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில், ரவுடி வெள்ளைக்காளி உயிர் தப்பியதை அறிந்த கும்பல் அரிவாளால் அவரை வெட்ட முயன்றனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்தது. இதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிகுண்டு வீச்சு
இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கொட்டு ராஜா என்கிற அழகு ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அழகுராஜாவின் கூட்டாளிகள் மதுரையைச் சேர்ந்த நிர்மல் குமார் (26), பாண்டி முனீஸ்வரன் (29), கார்த்தி (29), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (34), திருச்சியைச் சேர்ந்த அரவிந்த் (29), கோத்தகிரியை சேர்ந்த வினோத் (34) ஆகிய 6 கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அழகு ராஜாவை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக அழகு ராஜா தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஆயுதங்களை கைப்பற்றுவற்காக போலீசார் அவனை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென, போலீசார் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியது மட்டுமல்லாமல் அழகு ராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் எஸ்.ஐ சங்கர் என்பவரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
அப்போது மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
21 கொலைகள்
ரவுடி தாக்கியதில் படுகாயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
துப்பாக்கி சூடு நடைபெற்ற இடமான பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகில் உள்ள வனப்பகுதியில் திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் அரியமங்கலம் ஊராட்சியில் உள்ள கருத்தரிவான் குக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி. அதே ஊரைச் சேர்ந்தவர் வி.கே. குருசாமி. இவரும் நெருங்கிய உறவினர். இருவரும், 40 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் தனித்தனியாக குடியேறினர்.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 23 ஆண்டுகளாக 21 கொலைகள், பழிக்கு பழியாக இரு தரப்பிலும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விளக்கம்
என்கவுண்ட்டர் குறித்த தகவல் அறிந்த மத்திய மண்டல போலீஸ் ஜ.ஜி. பால கிருஷ்ணன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பம் தொடர்பாக 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகளில் சிலர் ஊட்டியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் ஊட்டிக்குச் சென்று பலரை விசாரணைக்காக அழைத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கொட்டுராஜா என அடையாளம் காணப்பட்டார். அவர் மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குகள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொட்டு ராஜாவிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை மீட்க, காவல்துறையினர் கொட்டு ராஜாவை மங்களமேடு சுங்கச்சாவடிக்கு அருகிலுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆயுதங்களை மீட்கும் பணியின்போது, கொட்டு ராஜா காவல்துறையினர் மீது ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினார்.
அது ஒரு காவல் வாகனத்தின் மீது பட்டு சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர் கொட்டுராஜா உதவி ஆய்வாளர் சங்கர் என்பரை ஆயுதத்தால் தாக்கி, அவரது கையில் காயத்தை ஏற்படுத்தினார். தற்காப்புக்காக, மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொட்டுராஜாவை சுட்டார்.
கொட்டு ராஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் அறிவுரையின்பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





