சென்னை, ஜூலை.6-
பெண் போலீசாரை பொதுவான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தாதது ஏன்? என்பது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-– தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த 30.6.2025 அன்று காணொலி வாயிலாக மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வின்போது, பாதுகாப்பு பணிகளுக்கு அதிக பெண் போலீசாரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.
‘போக்சோ’ குற்றங்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்களில் விரைவாக விசாரணை நடத்தி வழக்குகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற முக்கிய தேவையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான முக்கியமான வழக்குகளை விசாரிப்பதிலும், வாக்குமூலங்களை பதிவு செய்வதிலும் இன்றியமையாத பங்கு வகிக்கும் பெண் போலீசாரை தேவையின்றி திசை திருப்பக்கூடாது என்பதை உறுதி செய்வதே இந்த அறிவுறுத்தலின் முதன்மை நோக்கமாகும்.
பெண் போலீசாரை பணிய மர்த்துவதில் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் பெண் போலீசார் காவல்துறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர். அவர்கள் காவல்துறை பணியை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், முக்கிய பிரமுகர்களின் வருகை போன்ற பாதுகாப்பு பணிகளில் பெண்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சட்டவிதிகளின்படி, பெண் குற்றவாளிகளை கைது செய்தல், குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் அல்லது பெண் சாட்சிகளின் வாக்கு மூலங்களை விசாரித்து பதிவு செய்தல், பாதுகாப்பு பணிகளில் பெண்களின் கூட்டத்தைக் கையாளுதல் போன்ற சில பணிகளை பெண் காவலர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் அன்றாடப்பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் வழக்குகளை கையாள அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் பெண் போலீசார் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர்.
எனவே அவர்கள் வழக்கமான முறையில் மற்ற பாதுகாப்பு பணிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவ தில்லை, மேலும் தேவைப்படும்போது மட்டுமே பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()





